மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தையால் நடந்த விபரீதம்.. நடந்தது என்ன?
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகானத்தை செர்ந்தவர், கிரிஸ்டோபர் க்ரெகர். 31வயது ஆகும் இவருக்கு 6 வயதில் கோரி மிக்கோலோ (Corey Micciolo) ஒரு மகன் இருந்தான். இந்த குழந்தை, கடந்த 2021ஆம் ஆண்டு உயிரிழந்தான். இந்த குழந்தையை, அவரது தந்தையே கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், தனது குழந்தையை அவர் துன்புறுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கிரிஸ்டோபர் க்ரெகர், தனது மகன் குண்டாக இருப்பதாக கூறி, அவரை ஜிம்மில் இருக்கும் ட்ரெட் மில்லில் (treadmill) ஓட வைத்திருக்கிறார். தற்போது வைரலாகும் அந்த வீடியோவில், தொடர்ந்து ஓடும் அந்த சிறுவன் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் கீழே விழுகிறான். அவனை தூக்கி வலுக்கட்டாயமாக மீண்டும் அவனது தந்தை ஓட வைக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து சிறுவன் கீழே விழ, அவனை தூக்கி, அவன் தலையை கடித்து அந்த தந்தை மீண்டும் ஓட வைக்கிறார். சிறுவன் விழுவதும், அவனை மீண்டும் அவனது தந்தை ஓட வைக்க முயற்சிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.
அதனைத்தொடர்ந்து, அந்த சிறுவன் பேச முடியாமலும் நடக்க முடியாமலும் தடுமாறியுள்ளான். இதையடுத்து அந்த சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமமும், வாந்தி-மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. குழந்தையை மருத்துமனைக்கு அழைத்து சென்று சிடி ஸ்கேன் எடுத்திருக்கின்றனர். அப்போது, குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை இறப்பதற்கு சில நாட்கள் முன்னர், அவனது உடலில் ஆங்காங்கே சில காயங்கள் மற்றும் அடிப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை குழந்தையின் தாயார் பார்த்திருக்கிறார். இது குறித்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு அதிகாரிகளிடம் இது குறித்து புகாரும் கொடுத்திருக்கிறார். குழந்தை இறந்த பின்பு முழு உடல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கல்லீரல் சிதையும் அளவிற்கும் மாரடைப்பு ஏற்படும் அளவிற்கும் குழந்தைக்கு அடிப்பட்டுள்ளது என கூறியிருக்கின்றனர்.
இந்த அடிகள், குழந்தையை அவனது தந்தை ஓடுவதற்காக நிர்பந்தித்த போது ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தையின் தந்தை தரப்பில், இந்த உயிரிழப்பிற்கு காரணம் குழந்தைக்கு sepsis நோய் ஏற்பட்டதுதான் என்றும், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் மீது எந்த தவறும் இல்லை என்றும் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.