ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்பு..!! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்..
ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள பாண்டிகுய் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி 35 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா, குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன கருவிகள் உதவியுடன் ஆழ்துளை கிணறு அருகே பள்ளம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அவரை மீட்குப் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 18 மணி நேரமாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து, மீட்பு படையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்ததும், கிராமத்தினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து தௌசா மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரஞ்சிதா சர்மா கூறுகையில், “தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் காவல்துறையினர் உள்ளிட்ட எங்கள் துறைகளின் முயற்சியால் சிறுமியை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார். மேலும் இது குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படையின உதவி கமாண்டர் யோகேஷ் குமார் கூறுகையில், "600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு, 28 அடி உயரத்தில் சிறுமி சிக்கியிருந்தார். இருப்பினும் சிறுமியை வெற்றிகரமாக மீட்டுள்ளோம். இந்த மீட்புப்பணியில் 30 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் மற்றும் 10 மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டனர்” எனத் தெரிவித்தார்.
Read more ; Tamil Web Series | இந்த 8 தமிழ் வெப் சீரிஸ்களை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!! செம கதை களம்..!!