BREAKING | போதையில் காரை ஓட்டிச் சென்று இருவரை ஏற்றிக் கொன்ற 17 வயது சிறுவன்..!! ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு..!!
சொகுசு கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் அந்த 17 வயது சிறுவனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான இவர், தனது தந்தையின் சொகுசு காரை ஓட்டி சென்றுள்ளார். கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்றபோது, கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினான். இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், சொகுசு கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில் அந்த 17 வயது சிறுவனுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அடைப்பதற்கான உத்தரவை ரத்து செய்து சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இருவரை கார் ஏற்றிக் கொலை செய்த சிறுவனை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றத்தின் உத்தரவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.