ஆய்வில் வெளியான அதிர்ச்சி...! இந்த 90 மருந்து, மாத்திரை தரம் இல்லாதவை...!
ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தன.
அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை, அந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
NSQ என்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் (சட்டத்திருத்தம்) 2008இன் (Drugs and Cosmetics Act Amendment 2008) கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை வழங்கப்படலாம். அதேபோன்று, குறைந்தது பத்து லட்சம் அல்லது, கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மதிப்பைவிட மூன்று மடங்கு பணம் - இவற்றில் எது அதிகமான தொகையோ அதை அபராதமாக வசூலிக்கலாம்.