9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை..!! விசாரணை நடத்தி 61 நாட்களில் மரண தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!!
மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸின் ஜெய்நகரில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, 9 வயது சிறுமி டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, 19 வயது இளைஞர் ஒருவர், சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தார். வெகுநேரம் குழுந்தையை காணாத பெற்றோர் ஜெய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், குற்றவாளியை 2.5 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தான் செய்த குற்றத்தை சர்தார் ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் இருந்த இடத்தை கூறினார். இதையடுத்து, சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு, முழுமையான விசாரணையை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, அக்.30ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 25 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து பருய்பூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.5000 அபராதமும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர். ஆர்ஜிகர் மருத்துவமனை வழக்கு தொடர்பான போராட்டங்கள் இன்னும் தொடரும் நிலையில், இந்த சம்பவம் கொல்கத்தாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. குற்றம் நடந்து 61 நாட்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டது தற்போது இந்தியாவில் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.