மத்திய ஆயுத காவல் படையில் 84,106 காலிப்பணியிடங்கள்...! முழு விவரம்
மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 நிலவரப்படி, 84,106 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர்; மத்திய ஆயுத காவல்படை, அசாம் ரைஃபிள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10,45,751 வீரர்களில் 01.07.2024 நிலவரப்படி, 84,106 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய குடிமைப்பணியாளர் தேர்வாணையம், மத்தியப் பணியாளர் தேர்வாணையம், சம்பந்தப்பட்ட படைப்பிரிவுகளின் சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வு ஆகியவை மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
2023, ஏப்ரல் முதல் 2024, பிப்ரவரி வரை 67,345 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 64,091 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காவலர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய ஆயுத காவல்படை மற்றும் அசாம் ரைஃபிள் பிரிவில் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டதுடன், உடல்தகுதி தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.