முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Ramadass: 490 பேரூராட்சிகளில் உள்ள 8,130 பணியிடங்கள் ரத்து...! பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி..‌!

07:00 AM Mar 04, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பேரூராட்சிகளில் 8130 பணியிடங்கள் ரத்து.. இது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்..?

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுனர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்குப் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுனர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பது தான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் வினியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல், கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப் படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூகநீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article