For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn Govt: 8,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது... தமிழக அரசுக்கு பாமக கேள்வி...?

8,000 Assistant Professor posts are vacant
10:02 AM Sep 21, 2024 IST | Vignesh
tn govt  8 000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது    தமிழக அரசுக்கு பாமக கேள்வி
Advertisement

நூறு நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது தான் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்து, தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட மாநிலத் தகுதித் தேர்வுகளை (State Eligibility Test -SET) மீண்டும் நடத்துவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக காத்திருப்போரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மாநிலத் தகுதித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால், பட்டமேற்படிப்பும், அதற்கு மேலும் படித்து உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறத் துடிப்பவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையின்படி, அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, மாநிலத் தகுதித் தேர்வு அல்லது தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு தான் கடைசியாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஐந்தாண்டுகளாக தகுதித்தேர்வே நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் மாநிலத் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் அத்தேர்வு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால், கடந்த 6 ஆண்டுகளில் தேசிய தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் உதவிப் பேராசிரியர் பணிக்கு உரிய தகுதி பெற்றிருக்க மாட்டார்கள்.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில், இன்றைய நிலையில் சுமார் 8000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித்தேர்வு நடத்தப்படுவதாக இருந்தது.

ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக தகுதித் தேர்வுகள் நடத்தப்படாததாலும், ஜூன் மாதம் நடத்தப்படவிருந்த தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாலும், கடந்த 6 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் த்குதி பெற்றவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால் போட்டித் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு விட்டன. தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இத்தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை. இடைப்பட்ட காலத்தில், அரசு கல்லூரிகளில் மேலும் பல நூறு உதவிப்பேராசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள். அதனால், அரசு கல்லூரிகளில் கல்வித்தரம் மேலும், மேலும் சீரழியும். ஆனால், இதுகுறித்த எந்த அக்கறையும், கவலையும் தமிழக அரசுக்கு இல்லை.

ஜூன் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மாநிலத் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 107 நாட்களாகி விட்டன. இவ்வளவு நாட்களாகியும் தொழில்நுட்பக் குளறுபடிகளை ஒரு பல்கலைக்கழகத்தால் சரி செய்ய முடியவில்லை என்றால், அது பல்கலைக்கழகமாக இருக்கவே தகுதியில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதை தாமதப்படுத்தவே மாநிலத் தகுதித் தேர்வை அரசும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் தாமதப்படுத்துவதாக தெரிகிறது. இது உதவிப் பேராசிரியர் பணிக்கு காத்திருப்போருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் சங்கிலித் தொடர் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பல பாதிப்புகள் ஏற்படும். பின்னர் அரசே நினைத்தாலும் அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாது. எனவே, மாநிலத் தகுதித் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் முடிவுகளை அறிவிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாத இறுதிக்குள் உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை நடத்தி, நவம்பர் மாதத்தில் முடிவுகளை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement