பரபரப்பு...! BSP கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் சரண்...!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்தார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த இவர் நேற்று அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பெரம்பூர் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த கொலை சம்பந்தமாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர் என கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணை தான். விசாரணையை மேற்கொண்டு தீவிரப்படுத்தியதும் கொலை குறித்த முழுமையான காரணம் தெரியவரும். 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் கிடைக்கும் என்றார்.