காலை 8 மணி நிலவரம்!. ஒரே நாளில் 7 அடி உயர்ந்த நீர்மட்டம்!. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 71,777 கன அடியாக உயர்வு!
Mettur dam: காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 71,777 கன அடியாக உயர்ந்துள்ளதால் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 68.910 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து இரு நாட்களுக்கு முன், 75,500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கபினியில் இருந்து நேற்று, 40,292 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையில், 15,000 கன அடி என, 55,292 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் மாலை, 50,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 63,000 கன அடி; மாலை, 5:00 மணிக்கு, 68,000 கன அடி, மாலை 6:00 மணிக்கு, 70,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் குடியிருப்புகளை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஐந்தாவது நாளாக நேற்றும் காவிரியாற்றில், குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்ந்தது. போலீசார், ஊரக வளர்ச்சி, தீயணைப்பு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கரையோர பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 71,777 கன அடியாக உள்ளது. அந்தவகையில், மேட்டூர் அணை நீர்மட்டம். ஒரே நாளில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 68 அடியாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 31.772 டிஎம்சியாக உள்ளது.