அதிரடி...! சென்னையில் 2 நாட்களில் போக்கிரி குற்றவாளிகள் 77 பேர் கைது...! சாட்டை சுழற்றும் காவல் ஆணையர் அருண்...!
சென்னையில் 2 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைசெய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் அவர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தொடர்ந்து பதவியேற்ற உடனே சென்னை பெருநகரம் முழுவதும், குற்றப் பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவும் பிறப்பித்தார்.
தமிழகத்தை குற்றமில்லா நகரமாக மாற்ற 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளுக்கு (DARE) எதிரான இந்த சிறப்பு சோதனையில் 77 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் 2 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் 77 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இது போன்ற சோதனைகள் மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.