சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு!. பெய்ரூட்டில் தங்கவைப்பு!. விரைவில் தாயகம் திரும்புவர்!
Indians rescued: கிளர்ச்சியாளர்களின் வன்முறைக்கு மத்தியில் சிரியாவில் சிக்கியிருந்த 75 இந்தியர்கள் மீட்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, சிரியாவுக்கான பயண அறிவுறுத்தலை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டது. அதில், அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்கவேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். 963993385973 என்ற அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளும்படியும், hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், சிரியாவில் சிக்கியிருந்த காஷ்மீரை சேர்ந்த 44 பேர் உட்பட 75 இந்தியர்கள் நேற்று(செவ்வாய் கிழமை) மீட்கப்பட்டுள்ளனர் என்று டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கூற்றுப்படி, மீட்கப்பட்ட 75 இந்தியர்களும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றும். விரைவில் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு விமானங்களில் திருப்பி அழைத்து வரப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் மேலும், சிரியாவில் எஞ்சியிருக்கும் இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அரசு தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Readmore: ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!!! இனி நீங்க கட்டாயம் ஐஸ்க்ரீம் சாப்பிடுங்க..