நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பலி..!! மேற்கு வங்கத்தில் சோகம்..
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். பிர்பூம் மாவட்டத்தில் உள்ள லோக்பூர் பகுதியில் பதுலியா பிளாக் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.
இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். நிலக்கரி எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. வெடி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுலியா கிராமத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நிலக்கரி சுரங்கத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்ததே விபத்துக்கு காரணமாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் அதிகாரி ஒருவரி கூறுகையில், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வெடிவிபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் சிலரது உடல்கள் துண்டு துண்டாக சிதறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.
இறந்தவர்களின் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பிற உள்ளூர் மக்கள் சுரங்கம் அருகே வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகின்றது.