நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உட்பட 63 பேர் பலி!. திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்!.
Nepal landslide: நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதில் 7 இந்தியர்கள் உட்பட 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை வழியாக இரண்டு பேருந்துகள் (ஏஞ்சல் மற்றும் கணபதி டீலக்ஸ்) காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தன. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பேருந்து சென்ற பாதையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. முன்னாள் ெசன்ற பேருந்தில் 24 பேரும், பின்னால் சென்ற பேருந்தில் 41 பேரும் பயணித்தனர். திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், இரண்டு பேருந்துகளும் நிலச்சரிவில் சிக்கியது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நிலச்சரிவால், இரண்டு பேருந்துகளும் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதற்கிடையே கணபதி டீலக்ஸ் பஸ்சில் இருந்த பயணிகளில் இரண்டு பேர், அந்த பஸ்சில் இருந்து கீழே குதித்தனர். மற்ற அனைவரும் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
மொத்தம் 63 பயணிகளும் நிலச்சரிவில் சிக்கி ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சித்வான் மாவட்ட ஆட்சியர் இந்திரதேவ் யாதவ் கூறுகையில், ‘இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் உட்பட 63 பேர் நிலச்சரிவில் சிக்கி திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் தாமதமாகிறது. இருந்தும் தேசிய பேரிடர் மேலாண்மை படையுடன் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் இணைந்து பேருந்து மற்றும் இறந்த பயணிகளை மீட்கும் பணியில் களமிறங்கி உள்ளனர்’ என்று கூறினார். இந்த கோர சம்பவம் குறித்து நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹால் வெளியிட்ட பதிவில், ‘நாராயண்கர்-முகலின் சாலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும் வெள்ளம் காரணமாக பேருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் காணாமல் போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன். விபத்தில் சிக்கிய பயணிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’ என்றார். மற்றொரு விபத்தில், அதே சாலையில் புட்வாலில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் மேக்நாத் என்பவர், நிலச்சரிவு காரணமாக பலத்த காயமடைந்தார். சித்வான் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அடுத்தடுத்த நிலச்சரிவு சம்பவங்களால், நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் தெரிவித்தார். தற்போது நிலச்சரிவு காரணமாக நாராயண்காட் – முகிலிங் சாலை போக்குவரத்து மூடப்பட்டது. அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Readmore: செம சான்ஸ்..! மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.750 உதவித்தொகை + பயிற்சி வகுப்பு…!