அதிர்ச்சி..! சென்னையை தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு...!
மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6% உயர்த்தப்பட உள்ளது. மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் தங்களது கண்டங்கனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி என, பல்வேறு வகையில் ஆண்டுக்கு பல கோடி வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சிக்கு பிரதான வருவாயாக உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ. 350 கோடி வருவாய் கிடைக்கிறது. இவற்றின் மூலம் மாநகராட்சி பகுதியிலுள்ள வார்டுகளுக்கான வளர்ச்சி, ரோடுகள் பராமரிப்பு, கால்வாய்கள் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக மாநகராட்சிகள் ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகத் துறையின் உத்தரவும் உள்ளது.