சோகம்...! திருப்பதி கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தார் எண்ணிக்கை 6 ஆக உயர்வு...! 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண இலவச தரிசன கட்டணம் நாளை அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான இலவச தரிசன டோக்கன் வாங்க திருப்பதியில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நெரிசலில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் கூட்ட நெரிசலில் காயமடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.