அதிகம் எதிர்பார்க்கப்படும் 6 படங்கள்..! தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் கனவு நனவாகுமா..?
தமிழ் சினிமாவிற்கு 2025-ம் ஆண்டு சிறப்பான தொடக்கமாகவே உள்ளது. பொங்கலுக்கு வெளியான மதகஜராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. பாலாவின் வணங்கான் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை தவிர இந்த ஆண்டு முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் பல படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. பிரேக்டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம் பிப்ரவரி 6-ம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டீசர், ட்ரெயிலர் பாடல்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
குட் பேட் அக்லி :
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
வீர தீர சூரன்:
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய சு. அருண்குமார் தற்போது விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தை இயக்கி உள்ளார். துஷாரா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சர்மூடு இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 30-ம் தேதி இந்த படம் திரையரங்குகளி வெளியாக உள்ளது. சித்தா படத்தின் மிகப்பெரிய வெற்றி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கூலி :
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ள லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படஹ்ட்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். அனிருது இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இந்த படம் வரும் மே மாதம் திரைக்கு வர உள்ளது.
தக் லைஃப்
நாயகன் படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக் லைஃப். சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக உள்ளது.
தளபதி 69 :
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில் தளபதி 69 படம் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார். விஜய்யின் கடைசி படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, பாபி தியோ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு, மோனிஷா பிளெஸ்ஸி வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இவை தவிர சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 23 உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன.
எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்தாலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை 1000 கோடி வசூல் என்பது கனவாகவே உள்ளது. இந்த ஆண்டாவது ஏதாவது ஒரு தமிழ் படம் 1000 கோடி வசூலை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read More : வசூல் வேட்டையில் பட்டையை கிளப்பும் ’மதகஜராஜா’..!! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா..?