பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தர சோதனையில் தோல்வி!. CDSCO அதிர்ச்சி தகவல்!
53 Medicines: பாராசிட்டமால் உள்ளிட்ட 53 மருந்துகள் தர சோதனையில் தோல்வியடைந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சமீபத்திய CDSCO-ன் மாதாந்திர மருந்து எச்சரிக்கை அறிக்கையில், பொதுவாக மக்களால் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளும் தர சோதனையில் தோல்வியடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமில ரிஃப்ளக்ஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பான்டோசிட் மாத்திரை, ஷெல்கால் மற்றும் புல்மோசில் ஊசிகளும் தர சோதனையில் தோல்வியடைந்துள்ளன. இவை உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, அல்கெம் ஹெல்த் சயின்ஸின் ஆண்டிபயாடிக் கிளாவம் 625 மருந்தும் சோதனையில் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான, கலப்படம் செய்யப்பட்ட மற்றும் தவறாக முத்திரை குத்தப்பட்ட மருந்துகள், மருத்துவ சாதனங்கள், தடுப்பூசிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் பட்டியலை CDSCO வெளியிட்டுள்ளது. வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள் ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி ஷாப்ட்ஜெல்ஸ், ஆன்டியாசிட் பான்-டி, பாராசிட்டம்மல் ஐ.பி., 500 எம்.ஜி., ஆன்டி- டையபெட்டிக் மருந்தான கிளிம்பிரைடு, உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்து டெல்மிஷார்டன் உள்ளிட்ட 53 முன்னணி மருந்துகள் தரம் தொடர்பான ஆய்வில் தோல்வியடைந்துள்ளன.
இந்த மருந்துகள் அனைத்தும், ஹெட்டரோ டிரக்ஸ், ஆல்கெம் லெபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயோடிக்ஸ் லிமிடெட், கர்நாடகா ஆன்டிபயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.
குறிப்பாக, ஷெல்கால் மாத்திரிக்கைகள், உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து டோரன்ட் பார்மாசியூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் பரிசோதனையில் தோல்வியையே சந்தித்தன. கர்நாடகாவைச் சேர்ந்த ஆன்டி பயோடிக்ஸ் & பார்மாசியூட்டிகல்ஸ் தயாரிப்புகளான பாராசிட்டமால் மாத்திரைகளும் கூட தர பரிசோதனையில் வெற்றி பெறவில்லை.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருந்து எனக் கூறி, 156 மருந்துகளை இந்திய சந்தைகளில் விற்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்!. ஈரான் சதித்திட்டம்!. அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!