தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு...! கணவன் இல்லாத பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்...! முழு விவரம்...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் அன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சில முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி, ரூ.2 கோடி செலவில் 200 Pink Auto திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகளில் ஒன்றான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்படும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடி மானியம் வழங்கப்படும்.
திருவள்ளூர், கோயம்பத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 6 அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் ரூ.1 கோடியில் மறுசீரமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ள 451 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.9 கோடியில் முட்டை உரிபான்ன இயந்திரங்கள் வழங்கப்படும். ரூ.29 கோடி செலவில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய கைப்பேசிகள் வழங்கப்படும். சென்னை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தன்னார்வத் தொன்டு நிறுவனங்கள் மூலமாக இரவல் பெறுவோர்களின் மறுவாழ்வுக்கான இல்லங்கள் ரூ.2.80 கோடியில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.