5 மணிநேரத்தில் அடுத்தடுத்து 50 முறை!… 6 பேர் பலி!… ஜப்பானை புரட்டி எடுத்த அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானில் அடுத்தடுத்து 5 மணிநேரத்தில் 50 முறை ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று(01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்குத் தாக்கக்கூடும் என்றும் கூறியிருந்த நிலையில், 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி அலைகள் தாக்கியதால் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்குள்ள 36,000 வீடுகளில் உள்ள மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு கருதி ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம், சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மக்களைப் பாதுகாப்பதற்காக மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர். மேலும் மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கதை தொடர்ந்து ரஷ்யாவிலும், வடகொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கொரியா, தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தஜிகிஸ்தானில் 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர்.
அதாவது ஜப்பானில், 5 மணி நேரத்தில் 50 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புத்தாண்டில் ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 2 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக் இன்று அதிகாலை வரை 4 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 81-80-3930-1715, 81-70-1492-0049, 81-80-3214-4734, 81-80-6229-5382, 81-80-3214-4722 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.