மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை ; 10 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு!
அரசுப் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் முருகன் (54). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளியில் பயின்ற 6 மாணவிகளுக்கு முருகன் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து முருகனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனை குற்றவாளி என அறிவித்த நீதிபதி சரண்ராஜ், முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முருகனுக்கு 69 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் ரூ.29 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.