செம...! தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி...! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு...!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழில் கடனுக்காக ரூ.1,000 கோடியில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-ம்தேதி பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதற்கானஅரசாணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள், கூடுதலாக அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு, அதற்கான தீர்வுகள் காணப்பட்டன.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்கவும், முழுமையாக கட்டித் தரவும் அரசு முடிவெடுத்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியமாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.385 கோடியில் 4 ஆயிரத்து577 புதிய வீடுகள் கட்டப்படும். 9 ஆயிரத்து 975 வீடுகளுக்கு பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் ரூ.250 கோடி வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனும் வழங்கப்படும்.
சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.