For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜம்மு காஷ்மீரில் விடாது பெய்யும் கனமழை! 4 பேர் உயிரிழப்பு.. 350 குடும்பத்தினர் வெளியேற்றம்..

01:01 PM Apr 30, 2024 IST | Mari Thangam
ஜம்மு காஷ்மீரில் விடாது பெய்யும் கனமழை   4 பேர் உயிரிழப்பு   350 குடும்பத்தினர் வெளியேற்றம்
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மூன்று சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கிருந்த 350 குடும்பத்தினர் மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,

Advertisement

ஜம்மு - காஷ்மீரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால், 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் உள்ளிட்ட ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. குப்வாரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மலை மாவட்டங்களான தோடா, ரியாசி, கிஷ்த்வார், ராம்பன், காஷ்மீரின் குப்வாரா ஆகிய பகுதிகளில் கன மழை, இடி காரணமாக 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள், காஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவை மூடப்பட்டன. இன்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குப்வாரா மாவட்டத்தில் ஷும்ரியால் பாலம், கும்ரியால் பாலம், ஷத்முகாம் பாலம் உள்ளிட்ட சில முக்கிய பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. தோபான் கச்சாமா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா, புல்வாமா, அனந்த்நாக், காஷ்மீரின் பிற மாவட்டங்கள் மற்றும் ஜம்மு பிரிவின் சம்பா, கத்துவா மாவட்டங்களில் முக்கிய சாலைகள், பல்வேறு இணைப்பு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஜீலம், சிந்து உட்பட அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் மற்றும் மலை நீரோடைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையத் தகவல் படி, காஷ்மீரின் பல பகுதிகள், ஜம்முவில் சில இடங்களில் இன்று பிற்பகல் முதல் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மழை வெள்ள பாதிப்புகளை முன்னிட்டு நிவாரண பணிகளில் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement