சட்டப்பேரவையில் நிறைவேறிய 4 சட்ட மசோதாக்கள்..!! என்னென்ன மாற்றங்கள் வரப்போகுது தெரியுமா..?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஊராட்சிகள் சட்டத்தில், வீட்டுவரி என்பதற்குப் பதில் சொத்து வரி என குறிப்பிடுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நிர்வகிக்க அமைக்கப்பட்ட ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஊராட்சி சட்டத்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்களை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அந்த சட்ட முன்வடிவில், 1994ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்டத்தின் உட்பிரிவுகளின்படி மாநில தேர்தல் ஆணையருடைய பதவிக்காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக 2 முறை நியமிக்கவும் தகுதியானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை நிறைவு செய்தால் ஓய்வுபெறும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பல மாநிலங்களில் உள்ளதைப் போல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் வகையில் 2011ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 5 அல்லது 6 ஆண்டு அல்லது 65 ஆண்டு பதவி நீட்டிப்புக்கான வழிவகை இல்லாமல் இருப்பதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிந்துரையை மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவி ஏற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வரை எது முந்துகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம். அவர் மறுபணியமர்த்தத்துக்கு தகுதியுடையவர் இல்லை என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, ஊராட்சிகள் சட்டத்தில் குடியிருப்பவர், குழுவாக குடியிருப்பவர்கள், நலிந்த பிரிவினர், பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அவ்வப்போது அரசால் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு கூடுதலாக வீட்டுவசதி உள்ளிட்டவை வழங்கும் விதமாக, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு சட்டமுன்வடிவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த 4 சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்தார்.