For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தின் 3-வது துணை முதல்வர் உதயநிதி..! அவருக்கான அதிகாரம்...? அரசியல் & சினிமாவில் கடந்து வந்த பாதை...!

3rd Deputy Chief Minister of Tamil Nadu Udayanidhi
07:34 AM Sep 29, 2024 IST | Vignesh
தமிழகத்தின் 3 வது துணை முதல்வர் உதயநிதி    அவருக்கான அதிகாரம்     அரசியல்  amp  சினிமாவில் கடந்து வந்த பாதை
Advertisement

தமிழகத்தின் 3-வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா தொடங்கி உத்தரப் பிரதேசம் வரையிலும் 14 மாநிலங்களில் 23 பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். அதில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இரண்டு பேர் துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கின்றனர். கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், ஆந்திராவில் பவன் கல்யாண், தெலங்கானாவில் மல்லுபட்டி விக்ரமார்கா துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

Advertisement

இந்தியாவில் முதன் முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகார் மாநிலத்தைச் சேந்த அனுராக் நாராயணன் சின்கா. அவர் 1937 முதல் 1939 வரையிலும், 1946 -1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பிகாரின் சுஷீல் குமார் மோடி, குஜராத்தின் கேஷுபாய் பட்டேல் என பல முக்கிய தலைவர்கள் துணை முதல்வராகப் பதவி வகித்திருக்கின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபர் உதயநிதி ஆவார்.

உதயநிதியின் அரசியல் மற்றும் சினிமா பயணம்

2012-ல் இயக்குநர் ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் கண்ணே கலைமானே என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். 2018 முதல் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், 39 தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அவரின் பிரசார யுக்தியால் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றிபெற முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்னர், ஜூலை 4-ம் தேதி அவர் திமுக இளைஞரணிச் செயலாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற பிறகு இளைஞரணியின் செயல்பாடுகள் வேகமெடுத்தன.

தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிபெற்றார். அப்போது அமைந்த திமுக அமைச்சரவையில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. 2022 டிசம்பர் 14-ம் தேதியில், தமிழக அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி அறிவிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக உதயநிதியைத் துணை முதல்வராக்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் என்று அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களும் உதயநிதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்துக்களை பெற்றார். ஆளுநர் முன்னிலையில் இன்று துணை முதலமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 164வது பிரிவு ஆளுநரின் அதிகாரம் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களை நியமிக்கும் செயல்முறையை விவரிக்கிறது. இதில் துணை முதல்வர் பொறுப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கேபினட் அமைச்சருக்கு இணையாக மதிக்கப்படக் கூடிய பொறுப்பாக துணை முதல்வர் பதவி இருக்கிறது.

Tags :
Advertisement