33வது ஒலிம்பிக் திருவிழா!. பாரிஸில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற தமிழர்!.
Paris Olympic: பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியை ஈழத்தமிழரான தர்ஷன் செல்வராஜா ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடர், வரும் ஜூலை 26ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன், இத்தொடர் நிறைவு பெறும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் 16 விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. சுமர் 112 இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். அதனையொட்டி, பிரான்ஸ் நாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி செல்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 400 நகரங்களில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் அங்கு நடைபெறுகிறது. அந்த பத்தாயிரம் பேரில் ஒருவராக இந்த வாய்ப்பை பெற்றார் தர்ஷன் செல்வராஜா.
இலங்கையை சேர்ந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு பிரான்ஸ் வந்துள்ளார். தொழில்முறை செஃப். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சிறந்த பகெத் (Baguette) உருவாக்கத்துக்கான போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார். இதப் போட்டியில் 176 பேர் பங்கேற்றனர். இதில் வென்ற தர்ஷன் செல்வராஜாவுக்கு 4,000 யூரோக்கள் பரிசாக வழங்கப்பட்டது. இவர் தயார் செய்யும் பகெத் தான் பிரான்ஸ் அதிபர் மாளிகையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்தது சர்ப்ரைஸ் என்றும், மிகவும் அதிர்ஷ்டம் கொண்டவராக கருதுவதாகவும் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டது. அங்கிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு இந்த ஜோதி கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.