நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் 32 பேருக்கு மீண்டும் சம்மன்...!
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் 32 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. ஆரம்பக்கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களிடம்தான் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திலும் எந்த தடயமும் காவல்துறைக்குக் கிடைக்காதது விசாரணையில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயக்குமார் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மகனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும்,தோட்ட ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் மா்மமாக உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்தில் அப்பிரிவு போலீஸாா் ஆய்வு நடத்தினா்.
மரண வாக்குமூலம்’ என்ற பெயரில் அவா் எழுதியிருந்த ஒரு கடிதத்தில், தனக்கு ஏதேனும் நோ்ந்தால் இவா்கள்தான் காரணம் என்று 32 பேரின் பெயா்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தனிப்படை போலீஸாா் ஜெயக்குமாா் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவா் தங்கபாலு, நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா்.மனோகரன் உள்பட 32 பேரிடமும் விசாரணை நடத்தினா். தற்பொழுது சிபிசிஐடி போலீசார் 32 பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.