தூள்...! மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்... மத்திய அரசு அறிவிப்பு...! எவ்வளவு பேருக்கு தெரியுமா...?
பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு.. தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விகிதங்கள்: 2 புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை பூஜ்ய சதவீதம் என்ற விகிதம் மாற்றமின்றி தொடரும். ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரையும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சத்திற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 30 சதவீதம் என வரி விதிக்கப்படுகிறது. இது புதிய வருமான வரி முறையை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வேளாண்மைத் துறைக்கான திட்டங்கள்: வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி விடுக்கப்படுகிறது. விவசாயிகளால் சாகுபடி செய்வதற்கு பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய அதிக மகசூல் தரக்கூடிய, வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் 32 ரகங்கள் வெளியிடப்படும். இயற்கை வேளாண்மைக்கு அடுத்த இரண்டாண்டுகளில் நாடுமுழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையிலான உயிரி இடுபொருள் மையங்கள் 10,000 உருவாக்கப்படும். விவசாயிகள் மற்றும் அவர்களின் நிலத்தை உள்ளடக்கிய டிஜிட்டல் பொது அடிப்படைக் கட்டமைப்பு திட்டம் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
வரி விலக்குகள், வரி குறைப்புகள்: புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது. 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும்.
கூட்டுறவுத் துறை: கூட்டுறவுத் துறையில் அனைத்துத் தரப்பு வளர்ச்சி மற்றும் முறையான நடைமுறைகளுடன் கூடிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும். விரைவான கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற இலக்குகளுடன் கூடிய கொள்கை வகுக்கப்படும்.
முன்னுரிமைத் திட்டங்கள்: பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும். விரைவில் 12 தொழில்துறை பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 500 தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கப்படும். தொழில் பழகுநர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலை ஊழியர்களுக்கு வாடகைக்கு வீடு வழங்கும் திட்டம் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.