ஆபாச மார்பிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை!… ரூ.1 லட்சம் அபராதம்!... மத்திய அரசு எச்சரிக்கை!
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் திரை உலகிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக அமிதாப்பச்சன் நடித்த ’குட்பை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஷ்மிகா ’புஷ்பா 2’ ’அனிமல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவை மார்பிங் செய்து, கிளாமர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதன் ஒரிஜினல் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை இணைத்து இந்த வீடியோ மார்பிங் செய்து வெளியாகி உள்ளதாகவும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இது சட்டப்படி குற்றம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம் என்றும் அவர் பதிவு செய்திருந்தார். இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, போலி வீடியோ சித்தரித்து வெளியிட்டால், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியிட்டு குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.