ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி!. 27 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி!. பசி, தாகத்துடன் தவிக்கும் வேதனை!.
Borewell: ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமியை மீட்கும் பணி 27 மணிநேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டம் சருண்ட் என்ற கிராமத்தில் விவசாயி ஒருவர் தனக்குச் சொந்தமான நிலத்தில், தண்ணீருக்காக 700 அடி ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். இந்த ஆழ்துளை கிணறானது மூடப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை விவசாயியின் மூன்று வயது பெண் குழந்தையான சேத்னா விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த NDRF-SDRF மூத்த அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சேத்னாவை வெளியில் எடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்துக்கொண்டு வருகின்றனர்.
இன்னிலையில், சம்பவ இடத்திற்கு ’ஜுகாதா’ என்று அழைக்கப்படும் மீட்புக்குழு வந்து, பிரத்தேகமாக இருக்கும் கொக்கியின் உதவியால் குழந்தையை வெளியே எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களின் முயற்சியில் குழந்தை 50 அடிஉயரத்திற்கு தூக்கப்பட்டதாகவும். இடையில் பெரிய பாறை இருப்பதால் தொடர்ந்து குழந்தையை வெளியே தூக்கும் முயற்சி சற்று தொய்வடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் விரைவில் குழந்தையை வெளியே கொண்டு வரும் முயற்சிகளை அங்கிருக்கும் அனைவரும் செய்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், ஆழ்துளையில் விழுந்த குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் கொடுக்கப்பட்டு வந்தாலும், மண்ணின் ஈரப்பதம், மீட்புப் படையினருக்கு தொடர்ந்து சவாலாகி இருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சேத்னா கடந்த 27 மணி நேரமாக பசி, தாகத்துடன் இருப்பது அங்கிருப்பவர்களுக்கு வேதனையை அளித்து வருகிறது.