3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது பயங்கர தாக்குதல்…!
வடக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இன்று காலை பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள பயிற்சி முகாம் மீது 6 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று தீவிரவாதிகள் தளத்திற்குள் நுழைவதற்கு முன்பே கொல்லப்பட்டதாகவும், மற்ற மூவரும் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக விமானத் தளத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் தரையிறக்கப்பட்ட மூன்று விமானங்களும் ஒரு எரிபொருள் டேங்கரும் சேதமடைந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் அதிநவீன ஆயுதங்களுடன், ஏணியைப் பயன்படுத்தி விமானப்படை தளத்தின் வேலியிடப்பட்ட சுவர்களுக்குள் நுழைந்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
கடந்த சில நாட்களில்பாகிஸ்தானில் நடக்கும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். வெள்ளிக்கிழமை, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்மேற்கே 350 கிமீ தொலைவில் உள்ள டேரா இஸ்மாயில் கானில் போலீஸ் ரோந்துப் பணியை குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேரா இஸ்மாயில் கான் நகரில் போலீஸ் ரோந்துக்கு அருகில் இந்த குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி முகமது அட்னான் கூறியதாக டான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.