Tn Govt: ரூ.36 கோடி செலவில் சென்னையில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள்...!
பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி புயல், அதி கனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் 2 பல்நோக்கு நிவாரண மையங்கள் கட்டப்படும். பேரிடர்களின் போது பொதுமக்கள், மீனவர்கள், சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க, அபாய எச்சரிக்கை அறிவிப்பு மற்றும் ஒலி எழுப்பும் 1000 முன்னெச்சரிக்கை அமைப்புகள் ரூ.13.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகளுக்காக படகு, மீட்பு வாகனம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் ரூ.105.36 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ரூ. 12.24 கோடி மதிப்பீட்டில் 136 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும். மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ரூ. 84 இலட்சம் செலவில் 7 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும். சொந்த அலுவலகக் கட்டடங்கள் இல்லாத, பழுதடைந்த நிலையில் உள்ள 33 வருவாய்த்துறை அலுவலகக் கட்டடங்கள், அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள் ரூ.41.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படும்.