மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு..!! பண்டிகைய கொண்டாடுங்களே..
தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் என்பது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதம் வரை தாமதம் செய்யப்பட்டு அதன்பிறகு முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு அகவிலைப்படி என்பது 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இப்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 என்று அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என்று மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர். இந்த மாத இறுதியில் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளதன் மூலம் மோடியின் அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கி உள்ளது.
மத்திய அரசு : அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்த முக்கியமான காரணம் நாட்டில் அதிகரிக்கும் விலைவாசியை அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அவர்களது சம்பளத்தை உயர்த்தி, அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் நிதி நிவாரணம் வழங்குவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இந்த அகவிலைப்படி உயர்வு சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கணிசமாக அதிகரிக்கும், இதனால் அவர்கள் அதிகரிக்கும் விலைவாசியைச் சமாளிக்க உதவும்.