ஒவ்வொரு மாதமும் 2-ம் & 4-ம் சனிக்கிழமை தவறாமல் விடுமுறை...! பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கடிதம்...!
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் தவறாமல் விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இது குறித்து எழுதிய கடிதத்தில்; நாடு முழுவதும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கி ஊழியர்களுக்கும் கூட அனைத்து ஞாயிறு விடுமுறையுடன் கூட ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காம் சனிக்கிழமைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளன.
பன்நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆண்டுக்கு 200 வேலை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்றிருந்ததை இந்த ஆண்டு 219 நாட்களாக பள்ளி கல்வித்துறை அநியாயமாக உயர்த்தியுள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் மீது மட்டும் ஏன் இந்த கடும் கோபம் என்று தெரியவில்லை. ஆசிரியர்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள் பள்ளி கல்வித்துறைக்கு இயக்குநராக பொறுப்பேற்ற பின்பும் மேற்கூறிய இந்த அநீதிகள் ஆசிரியர்களுக்கு இழைக்கப்படுவதை எங்களால் ஏற்க இயலாது என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்
ஆகவே தாங்கள் உடனடியாக இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி அரசு ஊழியர்களைப் போன்று இனி ஆசிரியர்களுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிடுமாறு தங்களை வேண்டுகிறோம். இந்த முடிவினை விரைந்து எடுக்க சற்று காலதாமதம் ஆகும் என்று நீங்கள் கருதினால் அதுவரை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையும் நான்காம் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு குறிப்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.
அதன் அடிப்படையில் இம்மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும் அதைப்போன்றே ஆகஸ்ட் 24ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதாலும் இம்மாதத்தில் இந்த இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.