'சிங்கப்பூரில் திடீரென எகிறும் கொரோனா..' ஒரே வாரத்தில் 26,000 பாதிப்பு.. அரசு எடுத்த அதிரடி முடிவு! அடுத்து என்ன?
சிங்கப்பூரில் மீண்டும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால், ஒரே வாரத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளை முடக்கிப் போட்ட மனித உயிர்களை கொத்து கொத்தாக காவு வாங்கிய கொரோனா பெருந்தொற்று பேரலை சிங்கப்பூரை மீண்டும் தாக்கி வருகிறது. அடுத்த 2 அல்லது 4 வாரங்களில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதி உச்சம் தொடும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரங்களில் மட்டும் 25,900-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தோர் பதிவானதில், கொரோனாவின் புதிய அலையை எதிர்கொண்டுள்ளது. இது கொரோனா கட்டுப்பாடுகளின் தொடக்கமாக பொதுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனைக்கு வித்திட்டுள்ளது. அதிலும் முந்தைய வாரத்தின் 13,700 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தற்போதைய 90 சதவீதம் அதிகரிப்பு சிங்கப்பூருக்கு கவலை தந்துள்ளது.
இதனையடுத்து அதிகரிக்கும் நோயாளிகளை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குவது, மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்க வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வழிகாட்டுவது, அப்பணிகளை ஒருங்கிணப்பதற்கான மொபைல் மருத்துவ ஆலோசனைகள், மக்களிடையே கூடுதல் தடுப்பூசி டோஸ்களை வலியுறுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சுகாதார அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
மேலும் சராசரியாக தினசரி கொரோனா பாதிப்பு கண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, 181 என்ற எண்ணிக்கையிலிருந்து 250ஆக உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய அலையின் தொடக்கத்தில் சிங்கப்பூர் சிக்கி இருப்பதாகவும், வரும் நாட்களில் அது சீராக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அடுத்த 2 முதல் 4 வாரங்களில்; அதாவது ஜூன் நடுப்பகுதி மற்றும் இறுதிக்குள் கொரோனா அலை உச்சத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.