விநாடிக்கு 2,600 கனஅடி நீர்..!! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு..!!
காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று நவம்பர் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது.
காவிரி ஒழுங்காற்று குழு அண்மையில் கூடி தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் வினாடிக்கு 2,600 கன அடி நீரை நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட பரிந்துரைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தியது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு நவம்பர் 23ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை ஏற்க முடியாது என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.