இந்திய ரயில்வேயில் 25,000 காலி பணியிடங்கள்... ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி அமர்த்த முடிவு...!
இந்திய ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முடிவெடுத்துள்ளது ரயில்வே வாரியம்.
ஆட்கள் பற்றாகுறையை சமாளிக்க, ரயில் விபத்துகளை குறைக்க, நல்ல உடற்தகுதியுடன், ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்ற, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத 65 வயதுக்குட்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்களை ரயில் லோகோ பைலட், தண்டவாள பராமரிப்பு பொறியாளர், ஸ்டேஷ்ன் மாஸ்டர் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படியில் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர். ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ரயில்வே வாரியம் பல்வேறு மண்டலங்களில் 25,000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவதன் மூலம் காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மண்டல ரயில்வேயின் பொது மேலாளர்களுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து மருத்துவ தகுதி மற்றும் செயல்திறன் மதிப்பீடுகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஊழியர்களை பணியமர்த்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள், அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தை கழித்து, கடைசியாக பெற்ற சம்பளத்திற்கு இணையான மாத ஊதியம் பெறுவார்கள். அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் மற்றும் குறைந்து வரும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறையால் ரயில்வே எதிர்கொள்ளும் சிக்கலை போக்குவதற்கான நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது.