25000 டன் வெடிகுண்டு வீச்சு!… ஹிரோஷிமா தாக்குதலைவிட மோசமானது காசா மீதான தாக்குதல்!… மலேசிய பிரதமர் அதிர்ச்சி தகவல்!
கடந்த 4 வாரங்களில் மட்டும் காசா மீது 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை இஸ்ரேல் வீசியுள்ளது. இந்த அளவீடானது இரண்டு ஹிரோஷிமா வெடிகுண்டுகளுக்கு சமமானதாகும் என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தொடர்ந்து அழித்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் ஏராளமான பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மலேசிய பிரதமர் கூறுகையில், ‘இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிகம் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர்.
உண்மையில் அவர்கள் கூறிய கருத்து உண்மையானது தானா? என்பது குறித்து, யூரோ-மத்திய தரைக்கடல் தளம் வெளியிட்ட பதிவில், ‘காசா மீது இஸ்ரேல் ராணுவத்தால் வீசப்பட்ட குண்டுகளின் சக்தியானது, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் சக்தியை காட்டிலும் 1.5 மடங்கு அதிகம். ஹிரோஷிமா நகரத்தின் பரப்பளவு 900 சதுர கிலோமீட்டர்; காசாவின் பரப்பளவு 360 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ளது. கடந்த 4 வாரங்களில் மட்டும் காசா மீது 25,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை இஸ்ரேல் வீசியுள்ளது. இந்த அளவீடானது இரண்டு ஹிரோஷிமா வெடிகுண்டுகளுக்கு சமமானதாகும்.
காசா நகரம் முழுவதும் சேதமடைந்துள்ளன. காசாவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 4053 குழந்தைகள் மற்றும் 2570 பெண்களும் அடங்கும். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். 2219 பேரை இன்னும் மீட்கவில்லை. அவர்கள் மண்ணுக்குள் புதைந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த குண்டுவெடிப்பால் 84,100 குடியிருப்பு வீடுகள் அழிக்கப்பட்டன. பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில்துறை கூடங்களும் அழிக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளது. மலேசிய பிரதமரின் கூற்றை உறுதிபடுத்தும் வகையில் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. காசா நகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரே தெரிவித்துள்ளார்.
ஜெனீவா உடன்படிக்கையின்படி, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் மீதான தாக்குதல்கள் நடத்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், காசாவில் மேற்கண்ட பகுதிகளில் தான் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளன. இதற்கு காரணம் ஹமாஸ் தீவிரவாதிகள் இந்தக் கட்டிடங்களில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் இடத்தில் தான் தங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. காசாவில் மட்டும் 85 அரசு கட்டிடங்களையும், 47 மசூதிகளையும், மூன்று தேவாலயங்களும் தரைமட்டமானதாக கூறப்படுகிறது. இந்த போரினால் 35 ஊடகவியலாளர்கள், 124 சுகாதாரப் பணியாளர்கள், 18 அவசரகால மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.