முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம்... அன்புமணி கோரிக்கை

25 lakhs each to the families of those who died in Chennai
06:32 AM Oct 07, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் மரணம். போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.

Advertisement

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்களில் 5 பேர் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களில் பெரும்பான்மையானோருக்கு நிகழ்விடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்றுள்ளனர். விமானப்படையின் சாகச நிகழ்ச்சிகளைக் காண வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதும், உயிரிழந்ததும் மிகுந்த வேதனையளிக்கின்றன.

விமானப்படை சாகச நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும், அதன் மூலம் உலக சாதனை படைக்கப்பட இருப்பதாகவும் விமானப்படை அதிகாரிகள் கூறி வந்தனர். அதைக் கருத்தில் கொண்டு 15 லட்சம் பேர் வந்தால், அவர்கள் எந்த சிக்கலும் இன்றி நிகழ்ச்சியைக் காணவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பாதுகாப்பாக திரும்பிச் செல்லவும் போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவானவர்களே நிகழ்ச்சியைக் காண வந்தாலும் கூட அவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

ஒரே நேரத்தில் நிகழ்ச்சி முடிந்து 7 முதல் 8 லட்சம் பேர் திரும்பும் போது, அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொது போக்குவரத்தை நம்பியிருக்கும் நிலையில் அதற்கான வசதிகளை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையான போக்குவரத்து வசதிகளில் 10% கூட செய்யப்படாததால் இரவு 10 மணிக்குப் பிறகும் கூட பேருந்து நிறுத்தங்களிலும், மெட்ரோ மற்றும் பறக்கும் தொடர்வண்டி நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்பதை காண முடிந்தது. காலையில் தொடங்கி பிற்பகல் 1 மணி வரையில் சாகச நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திலும், அதன்பின் சாலைகளிலும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றது தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணம் ஆகும்.

லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு, பாதுகாப்புத் துறையினர் கேட்ட ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டதாக பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறது. நிகழ்ச்சியைக் காண பொதுமக்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? அவர்கள் எந்த பாதிப்பும், இடையூறுமின்றி திரும்பிச் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறி விட்ட தமிழக அரசு தான் இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ‌

Tags :
anbumaniDmkmarinatn governmentசென்னைதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article