7 பெண்கள் உட்பட 23 நக்சலைட்டுகள் சரண்!… இதுவரை மொத்தம் 761 பேர் சரண்!... சத்தீஸ்கர் காவல்துறை!
Naxalites: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் 7 பெண்கள் உட்பட 23 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் குறைந்தது 23 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் திங்கள்கிழமை சரணடைந்ததாக சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு பஸ்தாரில் உள்ள மாவோயிஸ்டுகளின் பைரம்கர் பகுதி கமிட்டியில் நக்சலைட்டுகள் இருந்ததாகவும், அவர்கள் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) அதிகாரிகள் முன் ஆயுதங்களை ஒப்படைத்ததாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி தன்டேவாடா போலீஸ் சூப்பிரெண்டு கவுரவ் ராய் செய்தியாளர்களிடம் கூறும்போது, போலீசாரின் மறுவாழ்வு இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்களாகவே விரும்பி, சரணடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். இந்த பிரிவினர், நக்சலைட்டுகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடும்போது, சாலைகளை தோண்டி போடுதல், சாலைகளை மறிக்கும் வகையில் மரங்களை வெட்டி போடுதல், சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
மாவோயிஸ்டு கொள்கைகளில் அதிருப்தி அடைந்து அதில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இதனால், தன்டேவாடா பகுதியில் இதுவரை 761 நக்சலைட்டுகள் சரணடைந்து இருக்கின்றனர். அவர்களில் 177 பேரின் தலைக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.