அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம்…! தாக்கத் தொடங்கிய அலைகள்… ஊருக்குள் வந்த கடல்நீர்…! நடுங்கும் ஜப்பான் மக்கள்!
ஜப்பான் நாட்டின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானின் வஷிமா இஷிகாவா உள்ளிட்ட இடங்களில் பேரலைகள் தாக்கத் தொடங்கியுள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியான இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து 1மீட்டர் முதல் 5மீட்டர் உயரத்திற்கு சுனாமி பேரலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் அதிர்ந்ததால் வீடுகளில் இருந்து வீதிகளில் ஜப்பான் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ஜப்பானில் 4 ரிக்டர் அளவுக்கு மேலான, அதிகபட்சம் 7.6 ரிக்டர் அளவிலான கிட்டத்தட்ட 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஜப்பானின் இஷிகாவா, நிகாடா, டோயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்களை உடனடியாக வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் பல இடங்களில் கடல் நீர் புக தொடங்கியுள்ளது. மேலும் அலைகள் வேகமாகவும் வீசத் தொடங்கியுள்ளதால் ஜப்பான் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதுவரை சுனாமி ஏற்படவில்லை என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
பொதுவாக ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம், அங்குள்ள கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஜப்பானில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானை தொடர்ந்து ரஷ்யாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.