2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி...! மத்திய அரசு ஆலோசனை...!
2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உலக தடகள அமைப்பின் தலைவரும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான லார்ட் செபாஸ்டியன் கோ-வை சந்தித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக தடகள தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ரிட்ஜன் மற்றும் உலக தடகள மேம்பாட்டு இயக்குனர் ஹெலன் டெலானி ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2036 ஆம் ஆண்டில் கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு இந்தியா அனுப்பிய விருப்பக் கடிதம் குறித்து உலக தடகள தலைவரிடம் மத்திய அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.
தேசிய விளையாட்டுக் கொள்கை, 2024 குறித்த வரைவை உருவாக்குவது, சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் திரு அடில்லே சுமாரிவாலா, இந்திய தடகள சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரவீந்தர் சவுத்ரி, விளையாட்டுத் துறை செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.