டி20 உலகக்கோப்பை தொடர்..!! அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா..? நடக்கப்போவது என்ன..?
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன. இந்நிலையில், எந்த 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என்பது குறித்து பார்க்கலாம்.
சூப்பர் 8 சுற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் 2-வது பிரிவில் அனைத்து போட்டிகளும் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், இங்கிலாந்து 4 புள்ளிகள் பெற்று 2ஆம் இடத்திலும் உள்ளன. தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்தியா இடம் பெற்றுள்ள முதல் பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான போட்டியும், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெறவுள்ளன. இதில், இந்திய அணி சிறிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அந்த வகையில், இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேற 96.6% வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
அதிலும் அந்த அணி இந்திய அணியை வீழ்த்தி 4 புள்ளிகளை பெறுவதோடு, ஆப்கானிஸ்தானை விட அதிக நெட் ரன் ரேட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற 57.3% வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அந்த அணி வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அடுத்து ஆஸ்திரேலியாவை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் வீழ்ந்தால் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினாலே போதுமானது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற 37.5% வாய்ப்புள்ளது.
வங்கதேச அணி அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோற்க வேண்டும். வங்கதேசம், ஆப்கானிஸ்தானை மிகப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். பின்னர், ஆஸ்திரேலிடாவை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அப்போது தான் வங்கதேச அணி, அரை இறுதிக்கு செல்ல முடியும். ஆனால், அது கடினம். ஏனென்றால், வங்கதேச அணியின் நெட் ரன் ரேட் மிகக் குறைவாக இருக்கிறது. அந்த வகையில், வங்கதேச அணிக்கு 8.6% மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியதாக எடுத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
Read More : எம்பியை கட்டி அணைத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி..!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!