2024 ஐபிஎல் ஏலம்!… வீரர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மினி அளவில் வெறும் ஒரு நாள் மட்டுமே நடைபெற உள்ள ஏலத்திற்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை மும்பை வாங்கியது போல் சில அணிகள் டிரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி இறுதிக்கட்ட பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன.
அதைத் தொடர்ந்து 2024 ஏலத்திற்காக உலகம் முழுவதிலும் விண்ணப்பங்களை ஐபிஎல் நிர்வாகம் வரவேற்றது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1166 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தனர். இருப்பினும் 10 அணிகளில் வெறும் 77 வீரர்களுக்கான இடம் மட்டுமே காலியாக இருப்பதால் அவர்களை பல்வேறு தகுதிகளை அடிப்படையாக வைத்து ஐபிஎல் நிர்வாகம் வடிகட்டியது.
இறுதியில் மொத்தம் விண்ணப்பித்த 1166 வீரர்களில் 333 பேர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்பதற்கு தகுதியானவர்களாக உள்ளதாக தற்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில் 214 இந்தியர்கள் 119 வெளிநாட்டு வீரர்கள் 2 துணை உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த 333 பேரில் 116 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்கள் 215 பேர் சர்வதேச அளவில் விளையாடாத வீரர்கள்.
இதை தொடர்ந்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு துபாயில் உள்ள கோகோகோலா ஏரியானாவில் நடைபெறும் ஏலத்தில் களமிறங்கும் 333 வீரர்களை வாங்குவதற்கு 10 அணிகளும் தயாராக உள்ளன. அந்த ஏலத்தில் முதலாவதாக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட், ஹரி ப்ரூக், ரோவ்மன் போவல், ரிலீ ரோசவ், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய வெளிநாட்டு வீரர்களுடன் மனிஷ் பாண்டே, கருண் நாயர் ஆகிய இந்திய வீரர்களின் பெயர்கள் அழைக்கப்பட உள்ளன.
அதை தொடர்ந்து 2023 உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ், இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, வணிந்து ஹசரங்கா, ஜெரால்ட் கோட்சி, கிறிஸ் ஓக்ஸ் , டார்ல் மிட்சேல், ஓமர்சாய் ஆகிய வெளிநாட்டு வீரர்களுடன் ஷார்துல் தாகூர், ஹர்சல் படேல் ஆகியோர் அடங்கிய வீரர்களின் பட்டியல் 2வதாக அழைக்கப்பட உள்ளது. அந்த வகையில் மொத்தமாக களமிறங்கும் 333 வீரர்களில் 23 பேர் அதிகபட்சமாக 2 கோடி பிரிவிலும் 13 வீரர்கள் 1.5 கோடி பிரிவிலும் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் காலியாக உள்ள 77 வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 262.95 கோடிகளை மட்டுமே செலவிட முடியும். அதில் குஜராத் 38.15, ஹைதெராபாத் 34, கொல்கத்தா 32.7, சென்னை 31.4, பஞ்சாப் 29.1, லக்னோ 13.15, ராஜஸ்தான் 14.5, மும்பை 17.75 கோடிகளை தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்க கைவசம் வைத்துள்ளன. இந்த ஏலத்தை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் மொபைலில் ஜியோ சினிமா சேனலில் பார்க்க முடியும்.