2024 Election: வாக்காளர் விழிப்புணர்வுக்கு... வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்...!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தற்போது வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் தேர்தல் ஆணையத்திற்கு உதவும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கம், அஞ்சல் துறை ஆகிய இரண்டு முக்கிய அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் கையெழுத்திட்டது.
நாட்டில் தேர்தல் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அயராத முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளின் கல்விப் பாடத்திட்டத்தில் தேர்தல் கல்வியறிவை முறையாக ஒருங்கிணைக்க தேர்தல் ஆணையம் சமீபத்தில் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அருண் கோயல் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அஞ்சல் துறை செயலாளர் வினீத் பாண்டே, இந்திய வங்கிக் கட்டுப்பாடு முகமையின் தலைமை நிர்வாகி சுனில் மேத்தா, மற்றும் அஞ்சல் துறை, இந்திய விமான நிலையம், இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
English Summary: 2024 Election: For Voter Awareness... Banks, Post Offices MoU