'90 நிமிடங்களில் ரூ.48,000 பில்!' 200 Km வேகத்தில் சீறிய போர்ஷே கார்! 2 பேர் பலி.. நடந்தது என்ன?
புனேவில் நடந்த சாலை விபத்தில் 17 வயது சிறுவன் மது போதையில் சொகுசு காரில் அதிவேகமான சென்று மோதியதில் இரண்டு ஐடி ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமாக அந்த 17 வயது சிறுவன் சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது அந்த சிறுவனுக்கு நிபந்தனையாக 15 நாட்கள் எர்வாடா போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்றும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத வேண்டும் என்று விதிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேயில் பிரபல பில்டரின் மகன் ஆவார். எனவே உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் நிர்ப்பந்தத்தில் சிறுவன் எளிதாக வெளிவந்துவிட்டதாக சர்ச்சை வெடித்தது. ஆனால் இதனை துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.
சிறுவன் ஒட்டிய காருக்கு நம்பர் பிளேட் கூட இல்லை. இதையடுத்து டிரைவிங் லைசென்ஸ் இல்லாத மகனை கார் ஓட்ட அனுமதித்த தந்தையை கைது செய்தனர். இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறுகையில், ''சிறுவனின் வயதை கேட்காமல் மது வழங்கிய பப் உரிமையாளர் நாமன் மற்றும் பப் ஊழியர் சச்சின், மற்றொரு பப் உதவி மேலாளர் சந்தீப் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவன் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், முதலாவதாக சென்ற பப்-ல் ரூ.48,000 பில் கட்டப்பட்டுள்ளது. இரவு 10.40 முதல் பப்-க்கு சென்ற இவர்கள் 12.10-க்கு அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்கள். அந்த பில்லை கைபற்றியுள்ளோம். முதல் பப்-பில் உணவு மற்றும் ட்ரிங்ஸ் வழங்குவதை நிறுத்தியதும் இரண்டாவது பப்புக்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் போது தான் விபத்து ஏற்பட்டது. ரத்த மாதிரி சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகாத போதிலும், கிடைத்த பப் சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில் மதுபோதையில் கார் ஓட்டிய பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ பஸ் டிரைவர், டிரக் டிரைவர், ஓலா, உபேர், ஆட்டோ டிரைவர் யாரேனும் தவறுதலாக விபத்து ஏற்படுத்தினால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர்கள் ஓட்டும் வண்டியின் சாவியை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால், ஒரு பணக்கார குடும்பத்தின் 16-17 வயது மகன் குடிபோதையில் போர்ஷை ஓட்டி இரண்டு பேரைக் கொன்றால், அவர் ஒரு கட்டுரை எழுதும்படி கேட்கப்படுகிறார்.
உபேர் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் எழுதிய கட்டுரை உங்களுக்கு ஏன் வரவில்லை. பணக்காரர்கள் மற்றும் கோடீஸ்வரர்களால் இரண்டு இந்தியா உருவாக்கப்படுகிறது என்று பிரதமரிடம் கேட்கப்பட்டபோது, அவர் (மோடி) அனைவரையும் ஏழைகளாக்க வேண்டுமா என்று பதிலளித்தார். இங்கு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் போராடுகிறோம், அநீதிக்கு எதிராக போராடுகிறோம்” என்று தெரிவித்தார்.