சீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 20 பேர் பலி..!! பலர் மாயம்!!
வடக்கு மற்றும் தென் மேற்கு சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இதுவரை 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 30 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மீட்புப் பணியில் 736 வீரர்களும், 76 வாகனங்களும், 18 படகுகளும், 32 டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.'பாலம் இடிந்து விழுந்ததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என சீன அதிபர் ஜி ஜின்பிங் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தீவிர வானிலை
ஜூன் மாதம் முதல் சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் சீனாவில் உள்ள 433 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றில் 107 ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்கிறது. மீதமுள்ள 33 ஆறுகளில் வரலாறு காணாத அளவிற்கு நீர் அளவு பதிவாகியுள்ளது. 10 முக்கிய நீர் வளங்களில் 15 நாட்களுக்கும் மேலாக அபாய அளவை தாண்டி நீர் வெளியேறி வருவதாக அந்நாட்டு நீர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆறுகளில் நிரம்பிய தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளமாக பெருக்கெடுத்துள்ளது. அதன் விளைவு 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் நிலை குறித்து தகவல் தெரியவில்லை எனவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; கொரோனா பெருந்தொற்று.. இந்தியாவில் அறிவிக்கப்பட்டதை விட 8 மடங்கு அதிக உயிரிழப்புகள்!! ஷாக் ரிப்போர்ட்