ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம்...! தெற்கு ரயில்வே அறிவிப்பு...!
கவரப்பேட்டை ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது 11-ம் தேதி இரவு 8.30 மணியளவில் மைசூரிலிருந்து பீஹார் மாநிலம் தர்பாங்கா செல்லும் பாக்மதி அதிவிரைவு பயணிகள் ரயில் மோதியது. இதில், ரயிலின் முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சம்பவ இடத்துக்கு அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோர் சென்றுமீட்பு பணிகளை மேற்கொண்டனர். ரயிலில் சுமார் 1,600 பேர் பயணம் செய்ததாக தெரியவருகிறது. சரக்குரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன.
விபத்து நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 தீயணைப்பு வாகனங்கள், வடமண்டல இணை இயக்குநர் தலைமையில் 2 மாவட்ட அலுவலர்கள், 3 நிலைய அலுவலர்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்களுடன் துரிதமாக மீட்புப் பணிகள்நடைபெற்றன. இதனால் விபத்துஇடத்தில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு இதர பெட்டிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. 28 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 3 மருத்துவக் குழுவினர்மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று காலை 9 மணிக்குள் சீரமைப்புப் பணிகள் முடிந்து ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். கவரைப்பேட்டை ரயில் விபத்தில் சதித் திட்டம் ஏதும் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது; பொன்னேரியில் சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் கடந்தவாரம் நடந்தன. ரயில் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்துள்ளார்.