ரூ.1,000 கல்வி உதவித்தொகை...! புதுமைப்பெண் திட்டம் மூலம் 2.30 லட்சம் பேர் பயன்...! அமைச்சர் கீதா ஜீவன்
புதுமைப்பெண் திட்டம் மூலம் இந்தாண்டு 2.30 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புடன் இடை நின்ற 11,922 பேர், தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த திட்டம் மூலம் இந்தாண்டு 2.30 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் நோக்கம்:
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பள்ளி படிப்புடன் இடை நின்ற மாணவிகளை மீண்டும் தங்களது மேல் படிப்பை தொடர வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டது.
கலை மற்றும் அறிவியல் கல்வியில் இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டும், பொறியியல் கல்வியில் இளநிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவியர்கள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவிகள் பதிவு செய்யலாம். மேலும் இது குறித்து கூடுதல் விபரங்களை 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.