3 மணி நேரம் ராகிங் செய்த சீனியர்ஸ்; சுருண்டு விழுந்து உயிரிழந்த மாணவன்!!!
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதான அனில் மெத்தானியா என்ற இளைஞர் ஒருவர் தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று இரவு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனிலை மூன்று மணிநேரம் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். இதனால் மூன்று மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருந்த அனில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அனில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது அவர், சீனியர்கள் தன்னை மூன்று மணி நேரம் நிற்க வைத்து ராகிங் செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில், அனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பேசிய அனிலின் உறவினர் தர்மேந்திரா,' நேற்று எங்களுக்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது, அனில் சுருண்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொன்னார்கள். நாங்கள் இங்கு வந்தபோது, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை ராகிங் செய்ததால் இறந்தது தெரிந்தது. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று கூறினார். மேலும், சம்பவம் குறித்து பேசிய டீன் ஹர்திக் ஷா, " அனிலின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்
இதையடுத்து, சமபவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முதல்கட்டமாக எஃப்ஐஆரில் 15 சீனியர் மாணவர்களின் பெயர்கள் சேர்த்துள்ளனர்.
Read more: பெற்றோர்களே கவனம்!! மாஞ்சா கயிறு அறுந்து இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்..